Tuesday, August 16, 2016

ஸ்ரீ சிதானந்த நாதர்


ஸ்ரீ சிதானந்த நாதர்

இந்த பாரத பூமியில் பல மகான்கள் அவதரித்திருக்கிறார்கள். அந்த மகான்களெல்லாம் தங்களுடைய தவ வலிமையினால் இறைத் தத்துவத்தை உணர்ந்து கால, தேச வர்த்த மானங்களுக்கேற்றவாறு அங்கு வசிக்கும் மக்களிடம் தாங்கள் தங்கள் தவ வலிமையினால் கண்டுணர்ந்ததைக் கூறி, அவர்களை நல் வழிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களுடைய உபதேசங்களால் வளர்ந்ததே நம் சனாதன தர்மம் என்று போற்றப்படும் இந்து மதம்.

வழிபடப்படும் தெய்வத்தின் பெயர் வேராக இருக்கலாம். ஆனால் எல்லா வழிபாடும் அந்தப் பரம்பொருளையே சேரும் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும். சனாதன தர்மம் என்ற ஆலமரத்தை பல்வேறு வழிபாட்டு முறைகளாகிய விழுதுகள் தாங்கி காத்து வருகின்றன. இந்த வழிபாட்டு முறைகளை நெறிபடுத்தி அதில் உள்ள களைகளையெல்லாம் களைந்து அதற்கு புத்துயிர் அளித்தவர் ஸ்ரீஆதிசங்கரர். அவர் நெறிபடுத்திய வழிபாட்டு முறைகளில் சாக்தம் என்ற பிரிவு, பராசக்தியை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடப்படுவதாகும்.

பராசக்தி வழிபாட்டில் ஸ்ரீவித்யா உபாசனை மிகச் சிறந்தது. ஸ்ரீவித்யா உபாசனையைப் பற்றி பலரும் பல ஐயப்பாடுகளைக் கொண்டிருந்த போது, அதைப் பற்றிய உண்மைகளை மக்களிடையே எடுத்துச் சொல்லி, ஸ்ரீவித்யா உபாசனை பரவக் காரணமாய் இருந்தவர் ஸ்ரீ பாஸ்கரராயர். ஸ்ரீ பாஸ்கர ராயர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து செய்து, வேதாந்த பண்டிதர்கள் கூட ஸ்திரீகளுக்கு மந்திரோபதேசம் செய்வதை விரும்பாத காலகட்டத்தில், ஸ்ரீவித்யையை பெண்கள் உட்பட உயர்வு தாழ்வு கருதாமல் எல்லோருக்கும் உபதேசித்து அதனைப் பிரபலப் படுத்தியவர் ஸ்ரீசிதானந்த நாதர் என்ற தீக்ஷ நாமம் கொண்ட ஸ்ரீ சுப்ரமண்யய்யர்.

ஸ்ரீ சிதானந்த நாதர் இதற்காக ஸ்ரீ ப்ரஹ்ம வித்யா விமர்சினி ஸபா என்ற ஸபையைத் தொடங்கி, அந்த ஸபையின் மூலம் ஸ்ரீவித்யைப் பரப்பியதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீவித்யா உபாசகர்களின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து வந்தார். இதுவே பின்னாளில் குஹாநந்த மண்டலி என்று பெயர் பெற்றது. அவரது மறைவுக்குப் பின் அவரது சிஷ்யர்களால் துவங்கப்பட்ட ஸ்ரீசிதானந்த மண்டலியும் ஸ்ரீவித்யையைப் பரப்புவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்று வரை இயங்கிவருகிறது.

ஸ்ரீசிதானந்த மண்டலி, ஸ்ரீசிதானந்த நாதரின் நூற்றாண்டு விழாவை 1982ல் கொண்டாடியது. அது சமயம் இம்மண்டலியினரால் வெளியிடப்பட்ட ஸ்ரீசிதானந்த நாதரின் நூற்றாண்டு விழா மலர், மிக அற்புதமான ஸ்ரீவித்யா பற்றிய பல கட்டுரைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஸ்ரீசிதானந்தர் பற்றிய அற்புதமான கட்டுரையை நமது குரு தேவேந்திரர் என்ற தலைப்பில் ஸ்ரீ பத்மானந்த நாதரென்ற தீக்ஷ நாமம் பெற்ற ஸ்ரீராமமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. அதனை உங்களுக்கு ஸமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறோம்.
குரு தேவந்த்ரர்
(ஸ்ரீ சிதானந்த நாதர்)
நமது குருதேவர் சித்திரபானு ஐப்பசி 30 (1882) சுக்ல சதுர்த்தி பானு வாரம் மூல நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் நெடிமிண்டி நரசய்யா என்கிற அந்தண ச்ரேஷ்டருக்கும், காமாட்சி அம்மாளுக்கும் உதித்தவர். நமது குருதேவர் தகப்பனார் தணிகை முருகனை வள்ளியை மணக்கவந்த கோலத்திலேயே தரிசித்தவர். இவர்கள் குலெதெய்வம் தணிகை முருகனாகும். தனது தகப்பனாரிடமே வேதாத்யயனம் செய்தவர். ஸ்ரீ நரசய்யா அவர்களுக்கு வெங்கடராமன், குப்புசாமி என மற்றும் இரு புத்திரர்கள். தமது 16 வயதில் பழவந்தாங்கலைச் சார்ந்த நங்கை நல்லூரைச் சேர்ந்த ஸ்ரீமான் சேஷய்யாவின் புத்ரி ஸ்ரீ விசாலாட்க்ஷி அம்மாளை விவாகம் செய்து கொண்டார். 1898-ல் தம்பியர் இருவருடனும் காஞ்சிபுரத்திற்கு வந்து சகோதரர்களை பள்ளியில் சேர்த்தார். தனக்கும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டதன் பேரில் ஸ்ரீ சி. வைத்தியனாதய்யர் என்பவர் சகாயத்தால் முதல்,, இரண்டாம் படிப்பை முடித்து, 1901-ல் பரிட்சையில் சென்னை ராஜதானியில் மூன்றவாதாக தேர்வு பெற்றார். ஐந்தாவது பாரத்துக்கு இரட்டைப் ப்ரமோஷன் கிடைத்தது. இதற்கிடையில் 1901 மார்ச்சு மாதத்தில் நமது குருதேவர் தகப்பனார் விதேஹ முக்தியடைந்தார்.

1911-ம் வருஷம் பிப்ரவரி 11 தன் தாயார் அபிலாஷைக்கு இணங்கி உத்திர தேச யாத்திரைக்கு தாயாருடன் கிளம்பி அலஹாபாத் சென்று தாராகஞ்சு சிவமடத்தில் இறங்கினார். அவ்வமயம் கும்பமேளா மஹோதய புண்ணிய காலமாகையால் எண்ணிறந்த சாதுக்களையும் யோகிகளையும் தரிசித்தார். பரமசிவனது நெற்றிக் கண்ணில் இருந்து கிளம்பிய தேஜசுக்கு சமானமான ஒளியோடும், விசாலமான நயனங்களோடும் பரமானந்தம் ததும்பும் முக மண்டலத்தோடும் விளங்கும் ஒரு மஹாத்மாவைக் கண்டார் ஆஹா இம் மகானுபாவர் என் தந்தையை ஆட்கொண்ட ஷண்முக மூர்த்தியே! அடியேனையும் ஆட் கொள்ள இங்கு தோன்றியிருக்கிறார் என்று நினைத்து மெய் மறந்து ஆனந்த பாஷ்யம் சொரிய அடியற்ற மரம் போல் விழுந்து நமஸ்கரித்து "ஹே ஸத்குரோ! அடியேனை, இந்த ஸம்ஸார ஸாகரத்தினின்றும் கடையேற்றி ரக்ஷிப்பீராக" என்று கதறியழுதார்.

கருணைக் கடலாகிய அம்மகான் "குழந்தாய்! எழுந்திரு! பயப்படாதே" என்று கூறி இரண்டு கைகளாலும் வாரியெடுத்து தழுவிக் கடைக்கண் பார்வையாகும் அமிர்தத்தால் அஞ்ஞானத்தைப் போக்கி "எந்த ஊர்? உனக்கு என்ன வேண்டும்" என்று விசாரித்தார். நமது குருதேவர் "நான் தென் தேசவாஸீ. காஞ்சிபுரத்தில் பிறந்தவன். தற்காலம் சென்னையில் இருக்கிறேன். கும்ப மேளாவை தரிசிக்க இங்கு வந்தேன். அடியேன் பூர்வ ஜன்மங்களில் செய்த மகத்தான புண்யத்தால் தங்களைத் தரிசிக்கும் பாக்யம் பெற்றேன். தங்கள் அனுக்ரஹம் தவிர மற்றெதுவும் வேண்டிலேன்" என்று கூறினார். இவ்வார்த்தையைக் கேட்டதும் அப்பெரியார் சிறிது நேரம் கண்மூடி த்யானத்திலிருந்து பின் புன்முறுவலுடன் "குழந்தாய்! நாளை தினம் கழித்து மறுநாள் திங்கட்கிழமை மஹோதய புண்யகாலம் அன்று காலை சூர்யோதயத்துக்கு இங்கு வா" என திருவாய் மலர்ந்தருளினார். மஹோதயத் தன்று காலை அம்மஹானை அணுகி வந்தனம் செய்து நின்றனர். உடனே அந்த மஹாத்மா தீர்த்த பாத்ரத்தை எடுத்து அபிமந்த்ரணம் செய்து குருநாதருக்கு அபிஷேகம் செய்வித்து ஹம்ஸ மந்த்ரத்தையும், ஸ்ரீவித்யா மஹாஷோடசீ மந்த்ரத்தையும் உபதேசித்தனர். பிறகு இப்ப்ருஹ்ம வித்யைக்கு குருபரம்பரை அவசியம். குருபரம்பரா ஞானமில்லாமல் ஆத்மஞானம் ஏற்படாது என்றும் தன் தீக்ஷநாமம் குஹாநந்தர் என்றும், தன் குரு ஆத்மாநந்த நாதர் என்றும், அதற்குமேல் ப்ரகாசாநந்த நாதர் என்றும் - இவர்கள் யாவரும் பரமஹம்ஸர்கள் என்றும், ஸ்ரீ ஆத்மாநந்த நாதர் மஹாயோகி என்றும் சுப்ரமண்ய உபாஸனையில் கரை கண்டவர் என்றும், விளக்கி ப்ரஹ்மண்ய மந்திரத்தையும், குரு பாதுகா மந்திரத்தையும் அருளினார்.

நமது குருதேவருக்கு ஸ்ரீ சிதாநந்த நாதர் என்ற தீக்ஷ நாமத்தையும் சூட்டினார். அளவற்ற புதையல் கிடைத்த சந்தோஷத்தோடு புளகாங்கிதமடைந்து, ஜன்மா கிருதார்த்தமடைந்த திட நம்பிக்கையோடு ஸத்குரு ஸார்வ பௌமராகிய குஹாநந்த நாதர் பாத கமலங்களில் பன்முறை ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்து கைகட்டி வாய் புதைத்து நின்றனர்.


குஹாநந்தர் ஆக்ஞைப்படிதான் தங்கியிருந்த பைரவ சாஸ்திரிகள் இல்லத்துக்கு வந்து சாஸ்திரிகளுக்கும், தாயாருக்கும் ஆதியோடந்தமாக வ்ருத்தாந்தத்தைச் சொல்லி, அவதூதர் அனுக்ரஹத்தை உரைத்தனர். பிறகு சாஸ்திரிகளும், குஹானந்தரும் வெகு நேரம் ஹிந்தி மொழியில் சம்பாஷித்தார்கள். அன்று அமாவாசை-மஹோதய பர்வாவானதால் சாஸ்திரிகள் தான் செய்யும் பாதேவதாராதனத்துக்கு அவதூதரை ஆவாஹனம் செய்ய, அவதூதரும் இணங்க சாஸ்திரிகள் அவதூதருக்கு பாத பூஜை செய்து, உயர்ந்த ஆஸனத்தில் அமர்த்தி யாவரும் வந்தனம் செய்து கொண்டு, தேவி யஜனத்திற்கு ஆரம்பித்தனர். ஸ¨ர்யாஸ்தமனம் வரை இருந்து பிறகு அவதூதர் கங்கா தீரம் சென்றனர்.

இங்ஙனம் சுமார் ஒரு மாத காலம் பிரயாகையில் குருகுலவாசம் செய்து. காலையிலும் மாலையிலும், குருபரம்பரை, சுப்ரமண்ய தத்வம், அத்வைத வேதாந்த நுட்பங்களையும் அவதூதர் நமது குரு நாதருக்கு போதித்தார். பிறகு குஹாநந்தரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு தாயாருடன், அயோத்தி, காசி, கல்கத்தா, பூரி, ஜகந்நாதம், கோதாவரி, கிருஷ்ணா வழியாக சென்னை வந்தடைந்தார். குஹாநந்த நாதரின் இறுதி கட்டளைப்படி நமது குருநாதர் ரகஸ்யமாக ஷோடசீ உபாஸனையும், ஸ¨த ஸம்ஹிதா, மஹாவாக்ய ரத்னாவளி பாராயணமும் 12 வருஷங்கள் செய்தார்.

இந்த 12 வருட இடைவெளியில் கல்லிடக்குறிச்சி ராஜாங்க ஸ்வாமிகளை தரிசித்து, ஸித்தி ப்ரஹ்மாநந்தீயம், கீதை, உபநிஷத்து, பாஷ்யங்கள் கற்றுக் கொண்டார். சுவாமிகளும், உனக்கு குரு அனுக்ரகம் பூர்ணமாக இருக்கிறது என்று ஆசீர்வதித்தார். 1933-ம் வருஷம் திருவட்டீச்வரர் சந்நிதியில் அருட்கவி என்ற பட்டம் பெற்றார். தற்சமயம் காமகோடி பீடத்தை அலங்கரிக்கும் பெரிய பெரியவாள் ஆக்ஞைபடி, காஞ்சி காமாக்ஷி சன்னிதானத்தில் உள்ள ஸ்ரீ சக்ரத்துக்கு சுமார் 20 வருடகாலம் பிரதி பௌர்ணமியிலும் நவாவரண பூஜை செய்து வந்தார். நம் குரு தேவேந்திரர் ஆயிரக் கணக்கான சிஷ்யர்களுக்கு மந்த்ரோபதேசம், தீட்சை செய்திருக்கிறார். நூற்றுக்கணக்கானவர்களுக்கு பீடாதிகாரம் கொடுத்து, நவாவரண பூஜை செய்யும்படி கட்டளை யிட்டிருக்கிறார். சுவாஸினிகளுக்கு பீடாதிகாரம் கொடுத்து, பகிரங்கமாக நவாவரண பூஜை செய்வித்த பெருமை நமது குருநாதர் ஒருவருக்குத்தான் சேரும்.
இங்ஙனம் பலருக்குத் தீட்சை செய்வித்து, அவர்களை அஹங்க்ரஹோ பாஸனையில் திருப்பி, ப்ருஹ்ம வித்யாப்யாஸம் செய்வித்து வருங்காலத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய்ப் போதிப்பதை விட யாவரையும் ஒருங்கே சேர்த்து போதிப்பது சுலபமென ஒரு சபை நிர்மாணிக்கப்பட்டது. அதற்கு ஸ்ரீ ப்ரஹ்ம வித்யா விமர்சினி ஸபா என்று பெயர் வழங்கப்பட்டது. மேற்படி சபையின் சார்பில் நம் குருநாதர் அநேக நூல்களை இயற்றியிருக்கிறார். அவைகளில் முக்கியமானவை.

1. ஸ்ரீ நகர விமர்சனம்
2. குரு தத்வ விமர்சனம்
3. வரிவஸ்யாரஹஸ்யம் (தமிழாக்கம்)
4. ஸ்ரீ வித்யா ஸபர்யா பத்ததி
5. 6 ஸ்ரீவித்யா ஸபர்யாவாஸனை (தமிழ் ஆங்கிலம்)
7. ஸ்ரீ லலிதோபாக்கியான விமர்சனம்
8. ஸ்ரீ சுப்ரமண்ய தத்வம்
9. ஸ்ரீ வித்யா நித்யாஹிகம்
10. மனீஷா பஞ்சகம்
11. ஞானபிரகாசம்
12. லலிதா த்ரிசதீ பாஷ்யம்
13. ஸ்ரீ காமகலா விலாஸம்.
14. திருத்தணி பிரபந்தத் திரட்டு முதலியன

மஹான் பாஸ்கரராயர் எழுதிய வரிவஸ்யா ரஹஸ்யத்துக்கு தமிழாக்கம் கொடுத்ததும் ஸ்ரீவித்யா ஸபர்யா வாஸனை யென்னும், ஸ்ரீவித்யா நவாவரண பூஜா விளக்கமும் நமது குருநாதரின் தலை சிறந்த நூல்கள். நமது குருநாதர் ஸ்ரீவித்யையை பிரபலப்படுத்த காரண பூதராய் இருந்ததை முன்னிட்டு,  அவருக்கு அபிநவ பாஸ்கர என்ற விருது அளிக்கப்பட்டது. நமது குரு தேவந்திரர் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றி இருக்கிறார்.
1937 மே ஸ்ரீ குஹாநந்த அவதூதரின் சரணாரவிந்தத்தின் அனுக்ரஹத்தால் பல நூல்கள் வெளிவந்தனவாயினும் அவதூதரின் திருவாக்கினின்று வெளிவந்த பல ரஹஸ்யங்களடங்கிய ஸ்ரீ சுப்ரமண்ய தத்வம் எனும் ஒப்பற்ற நூல் வெளிவந்தபோது, நமது குருநாதர் மேற்படி சபைக்கு ஸ்ரீகுஹாநந்த ப்ரஹ்ம வித்யா விமர்சினி மண்டலி என்று திருநாமம் சூட்டி அன்று வரை வெளி வந்துள்ள பல நூல்களையும் ஸ்ரீ குஹாநந்த பாதுகைகளுக்கு அர்ப்பணம் செய்துள்ளார்.
1920 மே ஒரு நாள் இரவு 9 மணிக்கு பரதேவதாஸ்வரூபமான சேஷாத்ரி ப்ரம்மத்தை திருவண்ணாமலை கம்பத்திளையனார் கோயிலில் சந்தித்து வந்தனம் செய்தபோது ஸ்வாமிகள் சிரித்து விடியற்காலம் 3 மணிக்கு வா என்று கட்டளையிட்டார். நமது குருநாதர் பரம சந்தோஷமடைந்து அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்து விடியற்காலம் தரிசித்த போது ஸ்வாமிகளின் சரீரம் முழுதும் ஒரே சிவப்பாயிருந்தது. நமது குருநாதர் ஸாஷ்டங்கமாக நமஸ்கரித்தார். அப்போது ஸ்வாமிகள் நன்றாய் பார். தெரிந்ததா? சந்தேகமில்லையே? உனக்கு கிடைத்ததை பத்ரமாய்க் காப்பாற்று போ, என்று கூறிப் போய் விட்டார். நம் குருநாதர், சின்ன சேஷாத்ரி என்று வழங்கிய பகவான் ரமண மஹரிஷியைக் கண்டு பல அரிய, பெரிய வேதாந்த விஷயங்களை விவாதித்திருக்கிறார்.
ஸகல சாஸ்திர பாரங்கதரும், மஹாவித்வானும், ஸ்ரீ வித்யோபாஸக துரந்தருமாகிய ஸ்ரீவத்ஸ ஸோம தேவசர்மா அவர்கள், நம் குருதேவர் இயற்றிய காமகலாவிலாஸம் என்ற நூலின் மதிப்புரையில் கீழ்கண்டவாறு நம் குருநாதரை மதிப்பிடுகிறார்.
உலக நன்மையை நாடி ஸர்வாவயவசுந்தரியான அன்னை அவனியில் புருஷரூபம் எடுத்தனளா? ஸ்ரீ சங்கரர் பாஸ்கரர் என்னும் இரண்டு வித்வான்களின் ஒரே அவதாரமா? உபாஸக சிஷ்ய ஜனங்களின் புண்ய ராசியா? இக்காலத்து மஹாஜனங்களின் பெரும் பாக்யமா? நற்குணங்களின் ராசியே உருவெடுத்ததா? இதுவரை கிடைத்த குருக்களுக்கெல்லாம் குருவா! இவர்? இங்ஙனம் போற்றற்குரிய அரும்பெரும் குணம் படைத்த ப்ரம்மஸ்ரீ அபிநவ பஸ்கர வரகவி ந சுப்ரமண்ய அய்யர். ஸ்ரீ பாரத தேவியின் அருந்தவப் புதல்வராவார்.
நம் குருநாதர் 1957-ம் வருஷம், சண்டி நவராத்ரி ஷஷ்டி திதியன்று தமது குல தெய்வமான முருகன் திருவடியை மஹா வஜ்ரேச்வரி திதி நித்யா ஸ்வரூபமாக அடைந்தார்.

இடுகையிட்டது Ramani.N நேரம் 10:22 முற்பகல்

No comments:

Post a Comment