Friday, March 1, 2024

ருத்ர கபால துவார பாலகர்!

ருத்ர கபால துவார பாலகர்!

கோயம்பேடு சிவத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இருதுவார பாலகர்கள் “ருத்ர கபால துவாரபாலக மூர்த்திகள்” ஆவர். கைலாயத் திருவழியில் இறையடியார்களை இட்டுச் செல்லும் தெய்வ மூர்த்திகள் இவர்களே.சிவபெருமானின் திருமேனியை அலங்கரிக்கும் திருக்கபால மாலைகளைத் தாங்கும் பேறு பெற்றவர்கள்!

உத்தம சித்தபுருஷர்களும் மஹான்களும் தங்களுடைய வெவ்வேறு பிறவிகளில் சரீரங்களை உகுக்கும்போது கபால வாயுமூலமாக ஜோதியாய் வெளிப்பட்டுச் சிவனடி சேருவர். அவர்களுடைய கபால வாயுவைத் தாங்கிய புனிதமான கபாலங்கள் அக்னியாலோ, வாயுவாலோ எரிக்கப்பட, அழிக்கப்பட இயலாதவை, கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை புரிந்து அரிய இறைப்பணியாற்றிய அத்திருக் கபாலங்களை ஸ்ரீஅக்னி பகவானே தம் திருக் கரங்களில் தாங்கித் திருக்கயிலாயத்தில் சமப்பிக்கின்றார் . அவற்றைத் தம் கபால மாலையில் சேர்த்துத் தன் இறைத் திருமேனியில் தாங்குகின்றார் ஆதிசிவன்.

இதுவே சிவனடி அல்லது சிவபதவி அடைதலாகும்.. இத்தகைய தியாகம் புரிந்தோருக்கு இறைவனே பலகோடி ஜீவன்களை உய்விப்பதற்காக மீண்டும் பிறவிகள் அளித்துப் பல லோகங்கட்கும் அனுப்புவதுண்டு. இதனால் தான் இக்கலியுலகில் மஹான்கள், யோகியர், ஞானியர். சித்தர்கள் போன்றோர் பல்வேறு ரூபங்களில் அவதாரம் பெற்று  நம்மைக் கரையேற்றுகின்றனர்.
ஸ்ரீகுறுங்காளீஸ்வரரின் ஆலய ருத்ரகபால துவார பாலகர்கள் காணற்கரிய கபால மாலைகளை அணிந்து தரிசனம் தருகின்றனர். 

இம்மாலைகளின் தரிசனமே பல மஹான்களின், சித்தர்களின் தரிசனத்திற்கீடானது ஆகும். கபால மாலைகளுடன் கூடிய ஸ்ரீதுவார பாலகர்களின் தரிசனம் அரியதாம்.

பிரார்தனை முறை : குழந்தைகளுக்கான தோஷங்கள், நோய்கள், சாபங்கள், பாலாரிஷ்ட துன்பங்கள், சந்தான பாக்யமின்மை போன்ற துன்பங்களைத் தீர்க்கும் மூலவரே ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் ஆவார். ஆனால் மேற்சொன்னபடி சுயநலமான பிரார்த்தனைகள் எனில் இத்துவார பாலக மூர்த்திகளிடம்  நின்றவாறே அல்லவா உள்ளிருக்கும் மூர்த்தியை தொழவேண்டும் என்பது நியதியாகிறது.
உண்மையே! இங்கு எவ்வாறு பிரார்த்திப்பது?

“ஸ்ரீ ருத்ர கபால பாலகமூர்த்தியே போற்றி! என்னுடையது சுயநலமான பிரார்த்தனை என்பதை உணர்கின்றேன். இருப்பினும் என்னுடைய வாழ்க்கை சீர்பெற வேண்டி இதனைத் தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன் .மூலவராம் ஸ்ரீகுறுங்காளீஸ்வரரின் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தருவீர்களாக! என்று பிரார்த்தனைகளை சமர்பிக்க வேண்டும். பின் உட்சென்று மூலவரை தரிசிக்க வேண்டும்.

தகவல் - ஸ்ரீ அகஸ்திய விஜயம் , Feb 1995.

No comments:

Post a Comment