(பிரம்ம முராரி - மெட்டில் பாடவும்)
காத்யா யனியே காப்பாய் நீயே
காலமெல்லாம் உன் சரணே நானே
குன்றத்தூர் அமர்ந்து அருள்பவள் நீயே
குறைகள் தீர வந்தேன் நானே
கண்களால் உன்னை கண்ட உடனே
முன்ஜென்ம வினை அது தீர்ந்திடும் உடனே
கைகளால் உன்னை தொழுது நின்றாலே
வாழ்க்கையில் உயர்வோம் விடியும் முன்னே
தஞ்சம் என்றே உன்னை அடைந்தேன்
கொஞ்சம் எனையே பார்ப்பாய் தேவி
மஞ்சள் குங்குமம் கொண்டு வந்தேனே
நெஞ்சம் மகிழ்ந்து அருள்வாய் நீயே
வெள்ளிக் கிழமை விடிந்த உடனே
துள்ளிக் குதித்து ஓடியே வந்தேன்
அள்ளியே உந்தன் அழகை பருகிட
அள்ளி வழங்குவாய் அருளை நீயே
உந்தன் நாமம் சொல்லி வழிபட
எந்தன் உள்ளம் உவகையில் பொங்கும்
சந்தன காப்பில் உன்முகம் காண
எந்தன் மனமது மகிழ்ச்சியில் துள்ளும்
செவ்வாய் வெள்ளி பௌர்ணமி தினத்தில்
வேற்காடு கருமாரி மாங்காடு காமாட்சி
குன்றத்தூர் தேவி உன்னையும் காண
பழங்கள் பெற்றே நலமுடன் வாழ்வோம்
உன்முகம் கண்டிட ஒளிபெறும் வாழ்வே
இருமனம் இணைந்து திருமணம் நடக்கும்
குழந்தை பேறுமே பெறுவோம் நாங்கள்
இழந்த செல்வத்தையும் பெற்றிடு வோமே
இச்சா சக்தி கிரியா சக்தி
ஞான சக்தியாய் அருளும் தேவி
முச்சக்தி வேட்டல் முயன்றே செய்திட
மூப்பு பிணி நீங்கி பலகாலம் வாழ்வோம்
குன்றத்தூர் அமர்ந்த காத்யா யனியே
பொங்கும் மங்களம் தருவாய் நீயே
என்றும் உனையே பணிவோம் நாங்கள்
எங்களின் நெஞ்சில் குடிகொண்ட ருள்வாய்
-தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர் 28 .08 .12
கோயில் வரலாறு
சக்திவாய்ந்த வரம் தரும் அம்பிகையான ஸ்ரீ காத்யாயனி கேரளத்து மண்ணில் பிரபலமானவள் என்றாலும் தமிழகத்தின் தலைநகராகிய சென்னையில் தெற்குப்பகுதியான குன்றத்தூரில் கோயில் கொண்டு தன்னை நாடி வருகின்ற கன்னிப் பெண்களுக்கும் (ஆண்களுக்கும் கூட) விரைவில் கழுத்துக்கு மாலையிடும் வரத்தினை அளிக்கிறாள்.
குன்றத்தூர் பஸ்நிலையம் அருகில் நின்று சக்தி கோயில் என்று கேட்டால் தெரிந்துவிடும் அளவுக்கு இந்த பராசக்தி ஆலயம் பிரபலமாகி இருக்கிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கருவறையைப் புனருத்தாரணம் செய்து கடந்த 14.09.2005 ல் தான் கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார்கள்.
ஸ்ரீ சக்தி ஆலயத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியாசக்தி உருவில் ஸ்ரீ மங்களமாரி. கிருஷ்ணமாரி, அம்பிகைகளும் ஸ்ரீ காத்யாயனி தேவியும் கோயில் கொண்டுள்ளனர். இரண்டு மாரி தேவிகள் மூன்று கட்ட ஏகதள விமானக் கருவறையிலும் ஸ்ரீ காத்யாயனிதேவி தனி சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் இறைதத்துவத்தைப் பிரபஞ்ச சக்தியோடு இணைத்துக் கூறும் விதம் வித்தியாசமாக இருக்கிறது. ஆறடி உயர மங்களமாரி மண் நீர் காற்று கலவையால் உருவாகி இந்த பூமி பஞ்ச பூதங்களால் ஆகியது என்று உணர்த்துகிறாள்.
ஸ்ரீகிருஷ்ணமாரி, பஞ்சலோகத்தால் மனித செயலும் உலக ஆக்க வேலைகளும் நடக்கிறதென்று உணர்த்துகிறாள். ஸ்ரீ காத்யாயனி தேவி முக்கிய சக்தியாக கல்லால் ஆக்கப்பட்டவளாய் அமர்ந்து கொண்டு உறுதியான மலைகள் போல இந்த உலகம் உறுதியானது. இறைவனும் ஸ்திரமானவன் என்று உணர்த்தி அருள்கிறாள். ஸ்ரீகாத்யாயனி தேவி காந்த சக்திமிக்க சந்திர காந்தக்கல்லால் ஆகி அழகு முகத்தோடு காட்சி தருகிறாள். பல்லவர் காலக் கட்டடக் கலையமைப்பில் ஒரு தேரினைப் போல மாரிகள் சன்னதி ஆக்கப்பட்டு திருசுற்றில் அஷ்டலக்ஷ்மிகள் மகாமண்டபத்தில் தத்ரூபமாக மகிஷாசுரமர்தினி ஆகிய சிலா ரூபங்கள் அங்கொரு சக்தி வெளிப்பாட்டினைக் காட்டும் விதமாக அமைந்துள்ளன.
ஸ்ரீ காத்யாயனி சன்னதியின் பின்பகுதியில் சூலத்தைப் போல மூன்று கிளையுள்ள இச்சா-ஞான-கிரியா சக்திகள் உருவில் வேம்பும் தல விருட்சமாக இருக்கிறது.
ஸ்ரீ சக்தி காத்யாயனி அம்மனின் கருவறையின் பின்புறம் உள்ள வேம்பின் கீழ் ஸ்ரீநாகராஜர். மனைவி ஸ்ரீ நாகதேவி, ஸ்ரீ குளிகனோடு எழுந்தருளி உள்ளார். இவர்களுக்கு சனிக்கிழமையிலும் நாகசதுர்த்தி, மாத சதுர்த்தியிலும் ராகு- கேது தோஷ நிவர்த்திக்கான சிறப்பு ஹோமங்கள் பூஜைகள் பெண்களால் நடத்தப்படு கிறது. சன்னதியின் எதிர்புறத்தில் சூலசக்தியும், நேர் எதிரில் கிரிநிம்ப விருட்சமும் திருமண மரம் எனப்படுகிற பின்ன விருட்சமும் தல மரங்களாக உள்ளன. மனவிருப்பங்கள் நிறைவேற நிம்பவிருட்சத்தின் அருகில் நெய் தீபமேற்றி பூஜை செய்கின்றனர்.
கல்யாணதேவி காத்யாயனி
பெரியபுராணம் இயற்றிய சேக்கிழாரின் இல்லத்திற்கு நேர் எதிரில் காத்யாயனி ஆலயம் உள்ளது. இதனாலேயே இத்தலத்தை திருமுறைக்காடு என்கிறார்கள். பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் திருமணத்திற்கு முன்பு தடைகள் ஏற்பட்டபோது காத்யாயன மகரிஷியை அணுகி வழிகேட்டார்கள். அப்போது மகரிஷி, காத்யாயனி தேவியையும் மந்திரத்தையும் உருவாக்கினார். மந்திரத்தை ஜபித்தவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடியது என்கிறது, புராணம். அதனாலேயே இவளை கல்யாணதேவி என்கிறார்கள்.
திருமண வழிபாடு செய்யும் முறை
ஸ்ரீ காத்யாயனி சன்னதிக்கு கல்யாண வரம் வேண்டி வருபவர்கள் மூன்று தரிசனங்கள் செய்வது சாஸ்திர விதி என்கிறார் திரு.குமார சிவாசாரியார். முதல் வார தரிசனத்தில் ஸ்ரீ காத்யாயனி தேவிக்கு இரு தேங்காய்கள் வைத்து அர்ச்சனை செய்து நவக்ரஹ தோஷங்கள் விலக வேண்டிக் கொள்வதுடன், இரண்டாவது வார தரிசனத்தில் ரிஷிகள் தேவர்கள் உருவிலுள்ள திருமண மர விருட்சத்தை பூஜை செய்து மனவிருப்பம் கைகூட வணங்கிடவேண்டும்.
மூன்றாவது வார தரிசனத்தில் தேவியின் பாதத்தில் ஜாதகத்தை வைத்து ஜென்மபத்ரிகா பூஜை செய்தல் வேண்டும். அதாவது ஒரு பெண் ஜனன கால ஜாதக அமைப்பில் கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் திருமணம் கை கூடுவதில் சிரமங்கள் ஏற்படும். ஞானபலம் தரும் குருவும், மங்களன் எனும் செவ்வாயும், களத்திர நாதன் சுக்கிரனும் நல்ல இடத்தில் அமர்ந்து விரைவில் திருமண வரம் தர விசேஷமான ஆகமமுறை நவக்ரஹமூல மந்திரங்கள் கூறி பூஜை செய்யப்படுகிறது. இவ்வாறு மூன்று வாரங்கள் தரிசனம் செய்தால் விரைவில் காத்யாயனி அருளால் கல்யாண வரம் பெறுகிறார்கள்.
இங்கு வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி மட்டுமே பிரார்த்தனை
தினங்களாக கொண்டாடுகின்றனர்.
கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை விசேஷ நாட்களில் நேரம் மாறுதலுக் குட்பட்டது.
பிரதி மாத பௌர்ணமியன்று மாலை 6 மணிக்கு மகாமேரு பூஜை செய்து சௌபாக்கிய ஓமமும், ஸந்தானகோபால ஓமமும் செய்து நீண்ட நாட்களாக குழந்தைப் பேறில்லாதவர் களுக்கு ஓமப் பிரசாததோடு கிரிநிம்ப மூலிகை பிராசாதமாக வழங்கப்படுகிறது. இதை உட்கொண்டால் நீண்ட நாள் கருத்தரிக்காத பெண்கள் குழந்தை பேறு அடைவர் என்பது உறுதி.
விருட்ச வழிபாட்டின் மேன்மையை விளக்கும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ‘’நலந்தரும் ஜலந்தரா” என்ற குடும்ப நல விருட்சத்தை பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வழங்குகிறார் திரு.குமாரசிவாசாரியார்.
ஆலயமுகவரி : ஸ்ரீ சக்தி கோயில்
திருநீர்மலை ரோடு, குன்றத்தூர், சென்னை.-600069
அர்ச்சகர் திரு.கே.குமார சிவாசான்யார்
செல்: 9176539026
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••*•Shanks♪♫••*•♫♪
No comments:
Post a Comment