Thursday, November 14, 2013

துளசி தேவிக்கும் திருமணம்


பிருந்தாவன துவாதசி 


துளசி தேவிக்கும் திருமணம் .... ( Every year this marriage function will perform in my friend house near  Mylapore chitrakulam ... , i will update pic later )

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, பிருந்தாவன துவாதசி என சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசி தேவிக்கும் திருமணம் நடந்த தினமாக கொண்டாடப்படுகிறது. ஆந்திரா,கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை மிக விமரிசையாக நடைபெறுகிறது. குறிப்பாக, கர்நாடகாவில், 'சிக்க தீபாவளி(சின்ன தீபாவளி) என்றே கூறுகின்றனர். வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கைகளுடன் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.



துளசிச்செடியின் பெருமைகள் நிறைய. மிக மகிமை வாய்ந்த துளசி, தோன்றிய புராணக்கதையை இப்போது பார்க்கலாம்.


புராணக்கதை.
இது விஷ்ணு புராணம், தேவி பாகவதம் முதலிய பல நூல்களில் விரிவாக அமைந்துள்ளது.
தர்மத்துவஜன் என்னும் அரசன், மாதவி என்னும் அரசகுமாரியை மணந்தான். அவனுக்கு, அவன் புண்ணிய பலன்களின் பயனாக, கார்த்திகை மாதம், பௌர்ணமியுடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று, ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அம்சமாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகே உருவான அந்தக் குழந்தைக்கு 'துளசி' என்று பெயரிட்டனர்.
துளசி, பத்ரிவனம் சென்று, ஸ்ரீமந் நாராயணனையே கணவனாக அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு தவம் செய்யலானாள்.  ஒரு காலில் நின்றபடி, இருபதினாயிரம் வருஷம் கடும் தவம் செய்தாள்(அக்காலத்தில், மனிதர்களுக்கு ஆயுட்காலம் அதிகம்). பழங்களையும் நீரையும் மட்டும் அருந்தி முப்பதினாயிரம் வருஷங்களும், இலைகள் மட்டுமே சாப்பிட்டு நாற்பதினாயிரம் வருஷங்களும், காற்றையே உணவாகக் கொண்டு பத்தாயிரம் வருஷங்களும் தவம் செய்தாள்.
பிரம்மன் அவள் தவத்துக்கு மெச்சி, அவள் முன் தோன்றினார். அவளிடம், இறைவனிடம் நீங்காத பக்தி, தாசத் தன்மை அல்லது மோக்ஷம் இவற்றில் எது வேண்டும் எனக் கேட்டார்.
ஆனால், துளசியோ அவரை வணங்கி, 'தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. நான் சென்ற பிறவியில், கோலோகத்தில், கோபிகையாய் இருந்தேன். ஸ்ரீ கிருஷ்ணரது பிரியத்துக்கு உகந்த மனைவியாகி இருந்தேன். அதனால், ராதை என் மீது கோபம் கொண்டு, பூவுலகில், மானிடப்பெண்ணாக பிறக்குமாறு சபித்து விட்டாள். ஆனால் என் நிலை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர், என் மீது இரங்கி, பிரம்மதேவனின் அனுக்கிரகத்தால், அவருடைய அம்சமான கணவனையே அடைவேன் என்று அருளினார். ஆகவே, ஸ்ரீமந் நாராயணனையே நான் கணவனாக அடைய அருளவேண்டும்' என்று வேண்டிக்கொண்டாள்.
பிரம்மன், 'துளசி, ஸ்ரீ கிருஷ்ணருடைய மேனியிலிருந்து உண்டான, சுதர்மன் என்ற கோபாலன், உன்னை மணக்க வேண்டுமென்று விரும்பினான். அவனும், ராதையால் சபிக்கப்பட்டு, பூலோகத்தில், மனுவின் வம்சத்தில், 'சங்கசூடன்' என்ற பெயருடன் பிறந்திருக்கிறான்.  அவனை நீ மணப்பாய். பின்னர், நீ விரும்பியவாறு, ஸ்ரீமந் நாராயணனையே அடைவாய். நீ செடியாகி, எல்லா புஷ்பங்களிலும் சிறந்தவளாகவும்,  விஷ்ணுவுக்கு பிரியமானவளாகவும் இருக்கப்போகிறாய். பிருந்தாவனத்தில் பிருந்தாவனி என்ற பெயருடன் விளங்கப்போகும் உன்னைக் கொண்டு, அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பூஜிப்பார்கள்' என்று வரமருளினார்.
துளசி, ராதையிடம் தனக்குள்ள பயத்தைப் போக்க வேண்டுமென கேட்க, பிரம்மனும், பதினாறு அக்ஷரங்கள்(எழுத்துக்கள்) உள்ள ராதிகா மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
துளசி, அந்த மந்திரத்தை தியானித்துக் கொண்டு இருக்கும் போது, ஜைகிஷவ்யர் என்பவரிடமிருந்து உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை புஷ்கர க்ஷேத்திரத்தில் தியானித்து, மந்திர சித்தி பெற்ற சங்கசூடன், பிரம்மனுடைய கட்டளையின் படி, அங்கு வந்தான். துளசி தனித்திருப்பதைப் பார்த்து, அவள் யார் என்று வினவினான்.

துளசியும், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, சங்கசூடன் தான் யார் என்பதையும், பிரம்மனுடைய கட்டளையின் பேரிலேயே அவளைத் தேடி வந்திருக்கும் விவரத்த்தைக் கூறி, தன்னை மணக்குமாறு வேண்டினான். துளசியும் சம்மதிக்கவே, காந்தர்வ முறையில் அவளை மணந்து கொண்டான்.
துளசி மிகச் சிறந்த பதிவிரதையாக விளங்கினாள். அவள் பதிவிரதா சக்தியானால், எங்கு சென்றாலும் சங்கசூடனுக்கு வெற்றியே கிட்டியது. கடும் தவத்தின் பயனாக, துளசியின் பதிவிரதா தன்மைக்கு எப்போது பங்கம் நேரிடுமோ அப்போதே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென வரமும் பெற்றான்.  அவன் கழுத்தில் அவனைக் காக்கும் மந்திரக் கவசம் மின்னியது.
மூவுலகங்களையும் வென்றான் சங்கசூடன். தேவர்களை துரத்தியடித்தான். அவனால் துரத்தப்பட்ட தேவர்கள், வைகுண்டம் சென்று ஸ்ரீமந் நாராயணனைச் சரணடைந்தனர். அவர்,' சங்கசூடனை வெல்லக் கூடியவர், சங்கரர் ஒருவரே, ஆகவே, நீங்கள் அவரைச் சரணடையுங்கள். தேவர்களின் நன்மைக்காக, நான் சங்கசூடனின் பத்தினியின் பதிவிரதா தன்மைக்கு பங்கம் ஏற்படச் செய்வேன்' என்று வாக்களித்தார்.
தேவர்கள்   சந்திரபாகா நதிக்கரைக்குச் சென்று, சிவனாரைத் துதித்தார்கள். சிவனார் அவர்கள் முன் தோன்றினார்.  சங்கசூடனுடன் போர்செய்ய ஒப்புக் கொண்டார்.
சித்திரரதன் என்ற கந்தர்வனை அழைத்து, சங்கசூடனிடம் தான் யுத்தம் செய்ய வருவதாகத் தெரிவிக்குமாறு பணித்தார்.
சித்திரரதன், பன்னிரண்டு வாசல்களை உடையதும், மிகுந்த கட்டுக்காவல் உடையதுமான சங்கசூடனது வாசஸ்தலத்தை அடைந்தான். அங்கு முதல் வாசலில் காவல் செய்து கொண்டிருந்த பிங்களாக்ஷன் என்பவனிடம், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, அவனும், சித்திரரதனை சங்கசூடனிடம் அழைத்துச் சென்றான்.
தேவர்களின் அரசைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு அவனிடம் சித்திரரதன் கூற, சங்கசூடன் மறுத்து, மறுநாள், சந்திரபாகா நதி தீரத்தில், சிவனாரை யுத்தத்தில் சந்திப்பதாகக் கூறி அனுப்பினான்.
சிவனாருடன் சேர்ந்து யுத்தம் செய்வதற்காக, சிவனாரின் கணங்களும், அஷ்டபைவரவர்களும், ஏகாதச ருத்திரர்களும்,அஷ்ட வசுக்களும், துவாதச ஆதித்யர்களும், சூரிய சந்திரரும், தங்கள் வீரர்களுடன் வந்தனர். மூன்று கோடி யோகினிகளுடன், மஹாகாளி பிரத்தியக்ஷமானாள். பூதப்பிரேத பைசாசங்களும், சிவனாருடன் சேர்ந்து போரிட வந்தன.
சங்கசூடன், தான் போரிடப் போவதைப் பற்றித் தெரிவித்தவுடன், துளசி, அதிர்ந்தாள். தான்  விடிகாலையில், கெட்ட கனவு ஒன்று கண்டதாகக் கூறி, போருக்குப் போக வேண்டாமென கணவனைத் தடுத்தாள்.
சங்கசூடன், 'சந்தோஷமும் துக்கமும் பிரிவும் இணைவும், காலத்தினால் நிகழ்கின்றன. இந்தப் போரினால், நமக்குள் பிரிவு வந்துவிடுமோ என்று நீ பயப்படுவது அர்த்தமற்றது. அவ்வாறு நேர வேண்டுமென விதி இருக்குமானால் அதை யார் தடுத்துவிட முடியும்?. விதியை மாற்ற யாராலும் முடியாது. நடப்பது நடக்கட்டும்  என்று  நம் வேலைகளை நாம் கவனிப்பது ஒன்றே விவேகமான செயல் ஆகும்' என்று அவளைத் தேற்றினான்.
விடிந்ததும் தன் காலைக்கடன்களை முடித்து, தான தர்மங்கள் செய்த பின், தன் மகனை அரியணையில் ஏற்றி, ஆட்சியை ஒப்படைத்து விட்டு, யுத்தத்திற்கு புறப்பட்டான்.
சந்திரபாகா நதிக்கரையில், சிவனார் தன் கணங்களுடன் யுத்தத்திற்கு காத்திருந்தார். அவரைக் கண்டதும், சங்கசூடன், தன் ரதத்திலிருந்து இறங்கி அவரைப் பணிந்தான்.
சிவனார், அவனிடம்,' நீ மிகுந்த பலமும், மந்திரசித்திகளும் உள்ளவன். தேவர்களின் அரசால் உனக்கு என்ன வந்து விடப்போகிறது. அதை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு' என்று அறிவுரை கூறினார். அதற்கு சங்கசூடன், 'தேவர்கள் அசுரர்களுக்கு எதிராகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குப் பகையாளிகள். ஆனால், தங்களிடம் எப்போதும் எங்களுக்கு பகை இல்லை. நாங்கள் வேண்டும் போதெல்லாம் வரங்களையே அளித்து வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ, தேவர்களின் சார்பாக தாங்கள் யுத்தத்திற்கு அழைத்திருக்கிறீர்கள். அவ்வாறு அழைத்த‌ பின்னும், தயங்குவது என் போன்றோருக்கு சரியல்ல. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும். நாம் இருவரும் விரோத பாவத்துடனேயே போரிடுவோம்' என்றான்.
பயங்கரமான யுத்தம் துவங்கியது. ஒரு சமயம், யுத்தத்தில் இடைவேளை ஏற்பட்ட போது,  விஷ்ணு ஒரு முதியவர் உருவம் எடுத்துக் கொண்டு, சங்கசூடனை அடைந்து, தான் கேட்பதை அவன் தட்டாது தர வேண்டுமெனக் கேட்டார். அவனும் ஒப்புகொள்ளவே, அவன் கழுத்திலிருந்த மந்திரக் கவசத்தைக் கேட்டார். சங்கசூடனும் கொடுத்து விட்டான்.
அதை பெற்றுக் கொண்டு, சங்கசூடனின் உருவத்தை எடுத்துக் கொண்டு, விஷ்ணு சங்கசூடனின் அரண்மனைக்குச் சென்றார்.
கணவனைக் கண்டதும், துளசி ஓடி வந்து பணிந்து வரவேற்றாள். சங்கசூடன் உருவில் இருந்த விஷ்ணு அவளிடம், தான் யுத்தத்தில் ஜெயித்து விட்டதாகவும், சிவபெருமான் விருப்பப்படியே, தேவர்களுக்கு அவர்களது அரசைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறினார். 
துளசி மிக மகிழ்ந்தாள். தன் கணவனுக்கு உபசாரங்கள் செய்யத் துவங்கினாள். இருவரும் ஆனந்தப்பட்டனர். துளசியின் நிலை அறிந்து சிவபெருமான், சங்கசூடனுடன் உக்கிரமாக யுத்தம் செய்யலானார். பிரளய கால அக்னி போல் ஜ்வலிக்கும் சூலாயுதத்தை அவன் மீது பிரயோகிக்க, சஙக்சூடன், இரு கரங்களையும் கூப்பி இறைவனைத் தியானித்தான். சூலாயுதம், சங்கசூடனின் தலையைத் துண்டித்தது.
துளசியின் அந்தப்புரத்தில், துண்டிக்கப்பட்ட தலை துளசியின் முன் வந்து விழுந்தது. அதைக் கண்ட துளசி துடித்தாள். மாயாசக்தியின் காரணமாக, அவளுக்கு அவள் வாங்கி வந்திருந்த வரங்கள் யாவும் மறந்திருந்தன.
தன் அருகில், தன் கணவன் உருவத்தில் இருந்த விஷ்ணுவிடம், "நீ என் கணவன் இல்லை. என்னை மோசம் செய்த நீ யார் என்பதைச் சொல்" என்று ஆத்திரத்தோடு வினவினாள்.
விஷ்ணு அவளுக்குத் தன் திருவுருவைக் காட்டினார்.  துளசியின் கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது. மனம் கொதித்து, 'என்னை வஞ்சித்த நீ,  கல்லாகப் போவாய்' என சபித்தாள்.
விஷ்ணு, அவளைப் பார்த்து, 'நீ முன்னர் என்னைக் கணவனாக அடைய வேண்டுமெனத் தவம் செய்தாய்.சங்கசூடனும், முற்பிறவியில் உன்னை அடைய விரும்பினான். பிரம்மன் வரம் தந்தபடி, முதலில் சங்கசூடனை மணந்தாய். இப்போது உன் தவத்திற்கு பலன் தர வேண்டிய தருணம். நீ இந்த சரீரத்தை விட்டு, என்னை அடைவாய். உன் உடல் கண்டகி நதியாகி மனிதர்களைப் புனிதப்படுத்தும். உன் உரோமங்கள், துளசிச் செடியாகி, எவ்வுலகிலும் நிலைபெறும்.
துளசிச் செடியிருக்கும் புண்ணியத் தலங்களில், நானும் தேவர்களும் தங்கியிருப்போம். ஆயிரம் குடம் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதைக் காட்டிலும், ஒரு குடம் துளசித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்வதே எனக்கு மிக விருப்பமாகும். துளசி மாலையைத் தரிப்பவர்கள், லக்ஷம் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுவார்கள்.
என்னைக் கல்லாக சபித்தது, பலிக்கும். நான் கண்டகி நதிக்கரையில் மலையாக உருவெடுப்பேன். என்னைப் பூச்சிகள் துளைத்து,சிறு சிறு கற்களாக நதியிலே தள்ளும். அவற்றை சாளக்கிராமம் என்ற பெயரில், என் அம்சம் நிறைந்ததாகப் பூஜிப்பார்கள். அதில், ஸ்ரீலக்ஷ்மியோடு நான் சாந்நித்யம் கொண்டிருப்பேன். சாளக்கிராம பூஜை செய்பவர்கள், வேறு யாகம், பூஜை முதலிய செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவே அவற்றிற்கு ஈடாகும். ஆனால் அதை வைத்திருப்பவர்கள், மிகுந்த நியமத்தோடு இருக்க வேண்டும் ' என்று கூறினார்.
இதைக் கேட்ட துளசி, தன் தேகத்தை விடுத்து, திவ்ய ரூபத்தோடு ஸ்ரீ விஷ்ணுவின் திருமார்பை அடைந்தாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
போரில் மாண்ட சங்கசூடன், திவ்ய தேகத்தை அடைந்து,  கோலோகத்திலிருந்து வந்த விமானத்திலேறிச் சென்றான். அவன் எலும்புகள் பூமியில் சங்கு வடிவங்களாயின. சங்கு தீர்த்தம் மிக புனிதமானது. அதனால் நீராடுபவர்களது சகல பாவங்களும் நீங்கும். கார்த்திகை சோமவாரங்களில், சங்காபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் சிறப்புற நடைபெறுகிறது. சங்கு இருக்குமிடத்தில் துர்சக்திகள் தூர விலகும். வலம்புரி சங்கு இருக்குமிடத்தில், ஸ்ரீ லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.
இந்தப் புராணக்கதை வெவ்வேறு புராணங்களில், சிற்சில மாற்றங்களோடு கூறப்படுகிறது.
துளசி பூஜை செய்யும் முறை:
துளசி பூஜை செய்ய, துளசிச் செடி மிக அவசியம். நாம் பூஜை செய்யும் போது, பூஜை செய்யும் படம், விக்ரகம் முதலியவற்றில், தெய்வத்தை எழுந்தருளப் பிரார்த்திக்கும் 'ஆவாஹனம்' துளசிக்கு அவசியமில்லை. அதில் எப்போதும் தேவி எழுந்தருளியிருக்கிறாள். இது சகல நன்மைகளையும் தர வல்லது. 
பிருந்தாவன துளசி விரத பூஜையில், துளசி மாடத்தில், நெல்லி மரத்தின் கிளையை சேர்த்து நட்டு, பூஜை செய்வது வழக்கம். நெல்லி மரம் ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம். ஆகையால், இவ்வாறு பூஜிக்கின்றனர். துளசிச் செடியின் அடியில், ஸ்ரீ கிருஷ்ணரது பிரதிமை அல்லது சாளக்கிராமத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும். துளசி மாடத்தின் இரு புறமும் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது.
துளசி மாடத்துக்கு கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். மாலையாகவும் சாற்றலாம். இரு பக்கமும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பஞ்சினால் ஆன கஜவஸ்திரம் சாற்ற வேண்டும். ரவிக்கைத் துணி போன்றவற்றையும் சாற்றுகிறார்கள். புடவை கட்டி அலங்கரிப்பதும் உண்டு.
காலையிலிருந்து உபவாசம் இருந்து, பின்,மாலை, விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது. சிலர் காலையிலும் செய்கிறார்கள்.  
பூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். 'இன்னின்ன பலன்களுக்காக பூஜை செய்கிறேன்' என்று வேண்டுவதைக் கோரி சங்கல்பம் செய்ய வேண்டும். அதன் பின் 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். துளசி அஷ்டோத்திரத்திற்க.

அவல் பாயசம் நிவேதனம் செய்வது சிறந்தது. இயன்ற வேறு நிவேதனங்களும் செய்யலாம். கர்நாடகாவில், இனிப்புப் பண்டங்கள் செய்து நிவேதனம் செய்கிறார்கள். மாலை வீடு முழுதும் விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்து, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.

அன்றைய தினம், யாராவது ஒருவருக்கு வடை பாயசத்துடன் உணவு வழங்கி, பாயசத்துடன் கூடிய பாத்திரத்தை தானம் செய்வது சிறப்பானது.

கார்த்திகை மாதம், பிருந்தாவன துவாதசி துவங்கி, ஒவ்வொரு  மாதமும் வளர்பிறை துவாதசியன்று விரதமிருந்து, துளசி பூஜை செய்து, பாயச தானம் செய்வது வழக்கம். மறுவருடம் பிருந்தாவன துவாதசியன்று விரதம் நிறைவு செய்யலாம்.  இவ்வாறு செய்வது மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

பூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. சிலர் மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.
மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும்.

துளசி தேவியைப் போற்றி, பூஜித்து,

வெற்றி பெறுவோம்!!!!!
 - தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪




No comments:

Post a Comment