Sunday, January 14, 2024

பொங்கல் காப்பு கட்டுதல் என்றால் என்ன ?


காப்பு கட்டுதல் என்றால் என்ன ?

Thank Fb
பொங்கல் என்பது நம் மண்ணிற்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஒருபுறம் இருந்தாலும், அது நம் உடலுக்கும் மனதிற்கும் மறைமுகமாக ஆரோக்கியம் தரும் நாள். பொங்கல் கொண்டாடும் நாள்கள் மழைக்காலம் தணிந்து, குளிர்காலத்தின் ஒருபகுதியில் நடைபெறுவதால், உடலின் அதிக உஷ்ணசக்திகள் மாறிமாறி வெளியேறி, மக்களிடையே பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களை உருவாக்கிவிடும்.

அதுமட்டுமின்றி மழைக்காலம் முடிந்தவுடன் பல நச்சுப்பூச்சிகள் வீட்டினை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துவிடும் என்பது நாம் அறிந்த விஷயம். இதனைத் தவிர்க்கவே பொங்கலுக்கு முன்பு வீட்டில் உள்ள அனைத்துப்பொருட்களையும் சுத்தம் செய்து, சுண்ணாம்பினால் வெள்ளையடித்து, பரண்களில் மாட்டுச்சாணம் கொண்டு மெழுகுவர். [ சுண்ணாம்பு மற்றும் மாட்டுச்சாணத்தின் காரத்தன்மையால், பூச்சிகள் வராது என்பது  அறிவியல் உண்மை.] மேலும் வெள்ளையடிப்பதினால் சுவர்களில் வெயிலினால் ஏற்படும் தாக்கம், வீட்டைத் தாக்காமல் பாதுகாக்கும், இதனால் வெயில் சார்ந்த அம்மை, வயிற்றுப்போக்கு நோய்கள் நம்மை அண்டாது.

பொங்கல் பண்டிகை துவங்குவதற்கு முதல்நாள்,--  சங்கராந்தி வழிபாடு துவங்குவதற்கு முன்பு--போகி அன்று -- பண்டிகைக் காலங்களில் வீட்டினரை நோய் அண்டி விடக்கூடாது என எண்ணி, “காப்பு கட்டுதல்” எனும்  சடங்கு கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மழையால் ஏற்படும் மூட்டைப்பூச்சிகளின் தொல்லையின் காரணமாகவும், விஷப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பான்களாகப் பயன்படும் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம்பூ, சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி கொண்டு வீட்டின் முகப்புகளிலும், தெருக்களிலும் தோரணங்களாகத் தொங்கவிடுவர், [ இவற்றில் ஏதேனும் ஐந்து அல்லது மூன்று.] இதில், நோய் தாக்கும் பூச்சிகள் வருவதில்லை என்ற உண்மை பொதிந்துள்ளது.

அறுவடை முடிந்து விளைபொருள்கள் வீடு வந்த பிறகே கொண்டாடப்படுகிறது பொங்கல். அப்படி வீட்டுக்கு வரும் விளைபொருட்கள்தான் அடுத்த ஒரு  ஆண்டிற்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருக்கின்றன. அவை கெட்டுப் போகாமல் பத்திரமாக இருந்து அந்த வீட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே வீடுகளில் காப்பு கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள் தமிழாய்வாளர்கள். ‘' விளைகிற நிலங்களும் அதில் விவசாயிகளுடன் சேர்ந்து பாடுபடும் கால்நடைகளும்கூட பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்ற பரந்த சிந்தனையில்தான் நிலங்களையும் தொழுவங்களையும்கூட இதில் சேர்த்துக் கொள்கிறோம்’' என்கிறார்கள் இவர்கள்.

இயற்கையின் கொடையால் எழும் உற்சாக ஒலியே 'பொங்கலோ பொங்கல்'. காப்பு கட்டு துவங்கி காணும் பொங்கல் வரை தொடரும் இயற்கைத் திருவிழா. 

இங்கு இயற்கைதான் பிரதானம். மனித இனமே இயற்கையில் இருந்து பிறந்ததுதானே. இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர் நமக்கு அளித்த வரமே பொங்கல் திருநாள்.
உணவை மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கான அருமருந்தையும் இயற்கை கொடுக்கிறது. 

பொங்கல் நமக்கு உணவு. வீட்டு வாசலில் சொருகும் காப்புக் கட்டு, மருந்து. உடல் நலத்தைப் பேணவே பொங்கல் பண்டிகையில் 'காப்பு கட்டுதல்' கலந்துள்ளது.

பொங்கல் காப்புக் கட்டில் பயன்படுத்தப்படும் சிறுபீளை(கூரைப்பூ), ஆவாரம்பூ, பிரண்டை, வேப்பிலை, மஞ்சள் கொத்து இவற்றைத்தான் பஞ்ச மூலிகைகள் என்கிறோம்.

ஆவாரம்பூவைப் பொன் மூலிகை என்று நமது சித்தர்கள் கொண்டாடுவர். வேர், இலை, பூ, காய், கட்டை, பிசின் என்று எல்லாமே மூலிகை குணம் உடையதுதான். தங்கச் சத்து நிறைந்தது. நரம்பு தளர்ச்சியைப் போக்கும். இன்சுலினைச் சுரக்கச் செய்யும் சர்க்கரைக்  கொல்லி, சிறுநீர் கல்லைக்  கரைக்கும். சிறுநீரகக்  கோளாறுகள் நீங்கும். உடல் குளிர்ச்சி, கருங்கூந்தல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீக்கும். குடிநீரில் குடிநீரில் ஆவாரம்பூவைச் சேர்த்து பருகலாம். 'ஆவாரை பூத்திருக்க சாவாரைக்  கண்டது உண்டோ' என்பது பழமொழி. எமனை விரட்டும் எளிய மூலிகை.

பிரண்டைக்குச் சஞ்சீவி, வஜ்ரவல்லி என்ற வேறு பெயர்கள், ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என்ற வகைப்பாடு உண்டு. ஓலை பிரண்டை, முப்பிரண்டை, உருட்டு பிரண்டை, தட்டை பிரண்டை, களிப் பிரண்டை, புளிப்பிரண்டை என்று இதன் வகைகள் நீளும். முப்பிரண்டை காண கிடைப்பது அரிது. வீடு முதல் 'சுடு' காடு வரை இதன்பயன்பாடு உண்டு.
பிரண்டையின் துவையல், பிஞ்சு பொரியல், ரசம், வடகம் எல்லாம் உடலுக்கு ஊட்டம் தருபவை. உடல் பருமனைக் குறைப்பவை. தளர்ச்சியை நீக்கி, ஆண்மையைப் பெருக்கி, இதயத்திற்கு வலு சேர்ப்பவை. முறிந்த எலும்புகளையும் எளிதில் ஒட்ட வைக்கும் தன்மை பிரண்டைக்கு உண்டு. இதனால் இதை 'வஜ்ரவல்லி' என்பர். எனவே பிரண்டையை இப்பொங்கல் முதல் நம் 'பிரண்டா'க்கிக் கொள்வோம்.

நறுமணம், சமையல் பொருள், கிருமி நாசினி, புனித பொருள் என்று மஞ்சள் பயன்பாடு அதிகம். பண்பாட்டிலும், பயன்பாட்டிலும், இதற்கு ஈடு இணை இல்லை. முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள் என்ற வகைகள் உண்டு. சளித் தொல்லை, வயிற்று உபாதைகள், தோல் நோய்கள், வெப்பு நோய்கள், ரத்தத்தை சுத்தம் செய்தல் என்று இதன் மருத்துவ பயன்களின் பட்டியல் தொடரும். மஞ்சள் இல்லா வீடு மணக்குமா?

பேய்க்கு மட்டுமல்ல நோய்க்கும் எதிரி வேப்பிலை. அந்த அளவிற்கு கோடைக்கால கொடையாக இருப்பது வேம்பு. பித்தம், நீரிழிவு, தொழுநோய், தோல் நோய், பூச்சிக் கொல்லி, அம்மை நோய்களுக்கு அருமருந்து. நோய் எதிர்ப்பு சக்தி, குடல் நோய்கள் என்று வெப்ப காலத்தில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும். சர்வ நிவாரணி, மாத விலக்கை தூண்டும், மஞ்சள் காமாலையை குறைக்கும்'வேம்பு நமக்கெல்லாம் தெம்பு'.

சிறுபீளை (கூரைப்பூ), என்பது காப்புக்  கட்டில் சிறப்பிடம் பெறும் மூலிகை இது என்றே சொல்லலாம். ஈரப்பாங்கான இடங்களில் மார்கழி குளிரில் ஏராளமாக விளைந்து கிடக்கும். இதன் அனைத்து பாகங்களும் அருமைதான். சிறுநீரைப் பெருக்குதல், சிறுநீர் கட்டிகளைக் கரைத்தல், சிறுநீர் பாதை அடைப்பு என்று சிறுநீரக பிரச்னைகள் அனைத்தும் போக்கும் அரிய மூலிகை.கர்ப்பிணிகளுக்கு உடல் வலுவைக் கொடுக்கும். வெள்ளைப் படுதலைத் தடுக்கும். 

இவை அடியேனின் சிறுவயது நினைவுகள்......
போகிக்கு  முந்தைய நாள் மதியம்    காப்புச்செடி பிடுங்குவதற்காக காட்டுப்பக்கம்  கிளம்பிவிடுவோம். அடர்ந்த காடு என்பதால்  துணைக்குப் பலரைச்  சேர்த்துக்கொண்டு  போவோம். மூன்று அல்லது ஐந்து  செடிகளில்  ஏதேனும்  ஒன்று குறைந்தாலும் மனம் ஒப்பாது; தேடி அலைந்து, கொண்டுவந்து,இரவே சிறு சிறு கட்டுகளாக்கி, தயாராக வைத்திருப்போம்.சங்கராந்தி அன்று,மாலை ,குளித்துவிட்டு, வீட்டில் காப்பு கட்டுவது ஆண்களின் கடமை.சங்கராந்தி சமையலை வீட்டுப் பெண்டிர் கவனிப்பர்;போகியன்று இரவு சங்கராந்தி வழிபாடு நடைபெறும்.

இனி இத்தகு நாள்கள் வருமோ?தற்பொழுது,காப்பு கட்டுவதற்குரிய பொருள்கள் வீட்டு வாசலுக்கே வந்து விடுகின்றன.அடியேன் வாழும் சேலம் மாவட்டம் பேளூரில்  மேனிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் இவற்றைச் சேகரித்து விற்பனை செய்கின்றனர்;அவர்களிடம் வாங்குவதும் மனதிற்கு மகிழ்வைத்தருகிறது.

அடியேன்  பிறந்து வளர்ந்த மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டியில்,பீளைப்பூ,வேப்பிலை,துளசி ஆகியவற்றைக்  காப்பாகக் காட்டுவர்; அடியேன் இப்பொழுது வதியும் பேளூரில் துளசிக்குப் பதிலாக ஆவாரம் பூவினைப் பயன்படுத்துகின்றனர்;சில இடங்களில்,பண்ணைக்கீரையின் பூவினைப் பயன்படுத்துவதுண்டு.வேப்பிலைக்குப் பதிலாக மாவிலை பயன்பாடும் உண்டு;எது எப்படியாகிலும்,சிறுபீளைப்பூ நிச்சயம் இடம்பெறும்.

கூடுதல் தகவல்  ஒன்று. 

கோயில் விசேஷங்களில் காப்பு கட்டுதல் என்பது என்ன?

ரக்ஷை என்றாலே காப்பு என்றுதான் பொருள். ரக்ஷாபந்தனம் என்றால், காப்பு கட்டுதல் என்று அர்த்தம். ஒரு காரியத்தை நாம் தொடங்குவதற்கு முன்பு அந்தக் காரியம் முடியும் வரையிலும் இடையூறுகள் ஏதும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செய்வதற்கு ரக்ஷாபந்தனம் என்று பெயர். நாம் செய்வது ஒரு நாள் பூஜையாகவும் இருக்கலாம் அல்லது பத்துநாள் பூஜையாகவும் இருக்கலாம். அதுமாதிரி செய்யக்கூடிய காரியங்களில் ரக்ஷாபந்தனம் செய்து கொண்டால், ஊர் எல்லையைத் தாண்டிப் போகக் கூடாது. உபவாசம் இருக்கவேண்டும், பிரமசரிய நியமத்துடன் இருக்கவேண்டும் என்று சாஸ்த்ரம் சொல்கிறது. அம்மாதிரி நியமத்துடன் இருந்து மேற்கொண்டால், அந்தக் காப்பு நம்மைக் காப்பாற்றும்.

கூடுதல் தகவல் இரண்டு..

கிராமக் கோவில்களில், காப்பு கட்டுதல் என்றால் வைக்கோல் புரியில் வேப்பிலைக் கொம்பு, மாவிலைக் கொம்புகளைச் செருகிக்கட்டி ஒரு நீண்ட மாலை போல் ஆக்கி கோவில் கூரையைச் சுற்றிக் கட்டுவார்கள். வீதிகளிலும் குறுக்கே கட்டுவார்கள். சிறப்பு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களும், கரகம் சுமப்பவர்களும் மஞ்சள் அல்லது காவி உடையணிந்து, கோவில் பூசாரியால் அர்ச்சிக்கப்பட்ட ஒரு விரலி மஞ்சளை நூலில் கட்டி, தங்கள் வலது கை மணிக்கட்டில் அணிந்து கொள்வார்கள்.

கூடுதல் தகவல் மூன்று. 

நம் பாரத கண்டத்தில் பல்வேறு பகுதிகளில் சங்கராந்திக் காலத்தில்  நெற்கதிர் தோரணம், கோதுமைக்கதிர் தோரணம் கட்டும் வழமையும் உண்டு.

No comments:

Post a Comment