Friday, January 5, 2024

ஆலய நுழை வாசல்

 'சிங்கப்பூர் ஆலயங்கள்'' எனது அண்மைய நூல்.

அறிமுக உரையாக ‘ஆலய நுழை வாசல்’ என்ற ஒரு குறிப்பையும்
இணைத்திருந்தேன். சாதாரண மனிதனும், சாதாரண ஆன்மாவும்
இறைவனோடு எப்படி இணையலாம் என்று நம் ஆன்றோர்களும்
மகான்,   பெரியோர்களும்,   சித்தர்களும்   நமக்கு   வழிக்காட்டி
 சென்றுள்ளார்கள்
 என்பதையும், அதனை நாம் நம் வாழ்வில் கடை
பிடித்து, கைக்கொண்டு
 இந்த மானிட பிறவினை இறைவனின்
திருவடியில் இணையலாம்,
 இணைக்கலாம் என்று என்ற
சிந்தையில் ஒரு சிறு குறிப்பு.

(குறைகள் இருப்பின் பொறுத்தருளக - கிருஷ்ணன், சிங்கை)
                  ******************************

     ஆலய நுழை வாசல்

           திருக்கோயில்கள் இல்லாத திருஇல் ஊரும்
        திருவெண்ணீறு அணியாத திருஇல் ஊரும்
        பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும்
        பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்
        விருப்பொடு வெண்சங்கம் ஊதா ஊரும்
        விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்
        அரும்போடு மலர் பறித்திட்டுண்ணா ஊரும்
        அவை எல்லாம் ஊரல்ல அடவி காடே.

                                           (தனித்திருத்தாண்டகம்: பாடல்: 933)
‏ 
 இயற்கை முழுவதிலும் அழகு உண்டு. சில ‏இடங்களில் அமைந்துள்ள அழகு நம் உள்ளத்தைத் கொள்ளை கொள்கிறது. மேலான எண்ணங்களை வளர அத்தகைய அழகு பய‎ன் படுகிறது.
உயர்ந்த எண்ணங்களை
 எண்ணுவதற்கு அழகிய ‏இடங்கள் பெரிதும் பய‎ன்பட்டு வந்திருக்கின்றன. அந்த இடத்துக்குப் புதிய அருள் சக்தியை நல்குகிறது. இயற்கையி‎ன் பொலிவும், அழகும்
ஒ‎ன்று சேர்ந்து அந்த இடத்தை புண்ணிய
 ஸ்தலமாக, ஆலயமாக அமைகிறது. பாடல் பெற்ற ஸ்தலங்கள் எ‎ன்றென்றும் மறையாத மகிமையுடன் விளங்குகிறது. பாமர மக்களும் பய‎னுறம் பொருட்டே ஆலயங்கள் அமைக்கப் பெற்றன. ம‎னித உடலில் உள்ள தத்துவங்களை
விளக்குவதற்கே ஆலயங்கள் அமைந்துள்ளன.

 
   அரசர்களும் செல்வந்தர்களும் பக்தர்களும் காலம் காலமாக் கோயில்களை எழுப்புவதிலும் அவற்றிற்குத் திருப்பணிகள் செய்வதிலும், அவற்றில் வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறச்செய்வதிலும் அதிக ஈடுபாடு காட்டினர். தங்கள் அரண்மனைகளை விடக்
கோயில்களே நிலைத்து நிற்க வேண்டும்  என்று   எண்ணிய மன்னர்கள் ஆலயங்களை
 வலிமையாகக் கட்டியதுடன் அவற்றை அவ்வப்போது புதுப்பித்தனர். ஊரின் உயர்ந்த
கட்டிடம் ஆலய இராஜ கோபுரம் என்று வரம்பு நிர்ணயித்து அதனைப் பிற கட்டிடங்கள்
 மிகா வண்ணம் வாழ்ந்தனர். காலப்போக்கில் எல்லாத் துறைகளிலும் அன்றாட வாழ்வியலிலும் ஆலயங்கள் பின்னிப் பிணைந்தன. தமிழ்நாட்டின் வரலாறே திருக்கோயில்களின் வரலாறு
என்று கூறுமளவு ஆலயங்கள் முக்கியத்துவம் பெற்றன. அரசர்கள், அதிகாரிகள், செல்வந்தர்கள், அன்பர்கள் ஆகியோர் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களுக்குக் கோயில்கள் அமைத்தனர்.
எனவே சிவன், திருமால், முருகன், விநாயகர், அம்மன், கிராம தெய்வங்கள் ஆகிய
வடிவங்களுக்குக் கோயில்கள் தோன்றின.


எங்கும் வியாபித்திருக்கும் இறைவனுக்கு ஆலயம் எதற்கு என்று வினா எழலாம்.
தொலைக்காட்சி, வானொலி நிலையங்களிலிருந்தும் ஒலிரும் மின்னலையை  அதற்குரிய
சாதனங்கள் மூலம்தான் நாம் ஒலி,
ஒளியை இனம் கண்டு பார்த்தும்,கேட்டும் இன்புற
 முடியும்.பூமியின் மடியில் நீர்பரந்து,விரிவியிருந்தாலும் 
தோண்டிதான் எடுக்கவேண்டும்;
பசுவின் உடல் முழுதும் பால் விரவியிருந்தாலும், மடிக்காம்பின் மூலம்தான் நாம் பெறமுடியும்.
 அது போன்றுதான் இறைவன் எங்கும் நீக்கமற வியாபித்து இருந்தாலும் ஆலயத்தின்
மூலம்தான் அருள் பாலிக்கிறார்.இதனைத்தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று
ஒளவையார் கூறியுள்ளார்.


 கோவில் வழிபாடு, திருவிழா நடைபெறும் போது அற்புதமான அலங்காரங்கள்
பற்பல வடிவங்களில் கண்களையும், கருத்தையும் கவர்கிறது. இவைகள் அங்கு
கூடியுள்ள அன்பர்களின் சூட்சும உடல்களைத் தூய்மைப்படுக்கிறது.
 மனத்திற்கு இதமான சாந்தி அளிக்கிறது.


மூவேந்தர்களின் அரண்மனைகள் இன்று மண்ணோடு மண்ணாய்ப் போயின.
ஆனால் அவர்கள் எடுத்த திருக்கோயில்கள் நம் தமிழ் நாட்டை அலங்கரிப்பதோடு,
சிறந்த அருள் நிலையங்களாகவும் விளங்குகின்றன.


எகிப்து, ரோம், கிரீஸ், பாபிலோன் முதலிய பழம் பெருமை வாய்ந்த நாட்டின்
கோவில்கள் இன்று பாழாகி
விட்டன.அங்கு வழிபாடு நடப்பதில்லை.
அக்கால மக்கள் வழிபட்ட உருவங்கள்,சிலைகள் இன்று கண்காட்சிச்

சாலையில் வைக்கப்பட்டுவிட்டன.

ஆனால் நமது கோயில்கள் இறைவன் உறைவிடமாகவும்,மனம் இறைவன்

இடத்தில் லயிக்கும் இடமாகவும், பக்தியோடு வழிபாடு செலுத்தும் அருள்
நிலையங்களாகவும் இருப்பதை எண்ணி எண்ணி இறும்பூதெய்த வேண்டும்.
திருக்கோவிலுக்குச் செல்வோர் கோயிலை இறைவன் இருப்பிடமாகவும்
அங்கு திருவுருவங்களை இறைவனின் அருளுருவ அடையாளங்களாகவும்
 நினைந்து வழிபட வேண்டும்.

            
           திருக் கோயில் உள்ளிருக்கும்
             திருமேனி தன்னைச்
            சிவனெனவே கண்டவர்க்கும்
              சிவன் உறைவன் அங்கே           - திருநாவுக்கரசர் -


     திருக்கோவில்களும்,அங்குள்ள திருவுரு மேனிகளும் நமக்கு இறையுணர்வைத்
தூண்டி வளர்ப்பதற்காக நம்
 முன்னோர்கள் அன்போடு செய்து வைத்த அரும்
பெருஞ் செயல்களின் அருள் தோற்றங்களாக
 விளங்குபவை.
          குறிகளும் அடையாளமும் கோயிலும்
            நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
         அறிய ஆயிரம் ஆரனம் ஓதிலும்
           பொறியிலீர் மனம் என்கொல் புகாததே!

                                                               -என்கிறார் திருநாவுக்கரசர்.

நமது முன்னோர்கள் கோவிலினுள் உள்ள திருவுருவத்தை ஏதோ கற்சிலையென

எண்ணவில்லை.அங்கு கடவுளையே கண்டார்கள்; அவரோடு பேசினார்கள்.
 'ஓங்கி ஆழ்ந்து அகன்ற
 நுண்ணியனே' என்றும், சிந்தையே கோவிலாகக்
கொண்ட எம்பெருமான் திருபெருந்துறை சிவனே'
என்றும்,

விண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக் கண்ணாரமுதமுமாய் நின்றான்'
என்றும்,
இறைவனது
 உண்மைத் தன்மைகள் பலவற்றையும் அனுபவித்துப் பாடினார்கள்.
கோவிலில் சிறு உருவத்தின் முன் நின்று பாடும்போதும் அவர்கள் அங்கு
கல்லிலான ஒரு வடிவத்தைக் காணவில்லை. அன்போடு, உருகி அகம்

குழைந்து பாடினார்கள்.

கண்ணப்பர், காளத்தீஸ்வரர் கோவிலில் உள்ள உருவத்தை ஒரு கற்சிலை என்று எண்ணியிருப்பாரானால் கல்லுக்குத் தான் ருசி பார்த்த மாமிசத்தை
உணவூட்டியிருப்பாரா?
தன் கண்ணைத் தோண்டிக் கற்சிலைக்கு அப்பியிருப்பாரா?
அவர் கடவுளையே கண்டார் .
‘பொய்யாருக்குப் பொய்யனாகவும், மெய்யர்க்கு மெய்யனாகவும் உள்ளவர் கடவுள்
'
 
       என்னன்  புருக்கி இறைவனை ஏத்துமின்
         முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
       பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியுந்
         தன்னன் பெனக்கே தலை நின்ற வாறே   
                                                               -திருமூலர்-

கோவிலில் கல்லாகக நின்று காட்சியளிக்கிறார் இறைவன்.
இராமகிருஷ்ணர், சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்.
தாம் பூஜை செய்து வந்த காளியின் திருவுருவத்தோடு அவர் பேசினார்;
காளியும் அவரோடு பேசினாள்.
தாம் வழிப்படும் அம்பிகையின் திருவுருவத்தோடு  உயிருண்டா இல்லையா
என்று பஞ்சை அதன் மூக்கின் முன் வைத்துப் பரிசோதிப் பார்த்து
அத்திருவுருவிற்கு உயிருண்டு என்று துணிந்தார்.

தெய்வம் என்றால் அது தெய்வம்.
வெறும் சிலை என்றால் அது சிலைதான்.
உண்டு என்றால் அது உண்டு.
இல்லை என்றால் அது இல்லை.
கண்ணதாசனின் வரிகள் கவிக்கம்பனை நினைவூட்டுகிறது.

யுத்த காண்டக் கடவுள் வாழ்த்துப் பாடல்
             ‘'ஒன்றே என்னில் ஒன்றே யாம்
                    பலவென்றுரைக்கில் பலவே யாம்!
              அன்றே என்னில் அன்றே யாம்
                ஆம் என்றுரைக்கில் ஆமே யாம்!


சமய நிறுவனங்கள் மூவகையின.
ஒன்று திருக்கோயில்கள்.
பிறிதொன்று திருமடங்கள்,
மற்றொன்று
 சமுதாயத்தினர் சமய வளர்ச்சியில் ஆர்வம் காட்டி
தோற்றுவித்த அமைப்புகள்.

இம்மூன்றும் சமய வளர்ச்சிக்கு முக்கியமானவை.
இறை வழிபாடு அகவாழ்வையும்,புறவாழ்வையும் நெறிபடுத்துகிறது.

நேர்மையும், புனிதமும் நிறைந்தது.

இன்று நம்மில் பலர் கோவிலுக்குப் போகும் கடமை மறந்துவிட்டனர்.
படித்தவர்களில் பெரும்பாலோர் ஆலய வழிபாட்டை அறவே
கைவிட்டனர்.  ஏதோ பாமர   மக்களுக்கும்,  பெண்களுக்கும்தான்
ஆலய வழிபாடு என்று எண்ணவும் செய்கிறார்கள்.   வாரத்திற்கு
ஒரு முறையாவது  இல்லறத்தாரோடு சென்று வழிபாடு செய்யும்
நியதியை மேற்கொள்வோமாக.  அப்படி செல்லும்போது மனம்
அடங்கி அமைதியான சிந்தையுடன்,பக்தியுடன் இறைவன்பால்
செலுத்தினால் இன்மையிலும்,மறுமையிலும் இன்பம் காணலாம்.

   
         ‘'நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
           நித்தலும் எம்பிரானுடைய கோவில் புக்குப்
           புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
            பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித்
           தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
              சங்கரா சயபோற்றி என்றும்
         அலைபுனல்சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும்
            ஆரூரா என்றென்றே அலறா நில்லே''            
                                                           - திருநாவுக்கரசர் -



மாணிக்கவாசகப் பெருமான்,
"தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்"

                                    (போற்றித் திருவகவல்)

ஒரு சமுதாயத்தில் அல்லது ஊரில் எத்தனையோ பெரிய மனிதர்கள்
தோன்றினாலும், வாழ்ந்தாலும், அவர்களை எல்லாவிதத்திலும்
குற்றமிலாதவராகப் பார்க்க எல்லாராலும் முடியாது. மனிதனுக்கு
மனிதன் பார்வைகள் வேறு பட்டுக் கொண்டே இருக்கும்.
அம்மனிதனின் வாழ்வும் நிலையிலாததது. சில தலைமுறைகளுக்குப் பி
ன்னர் மக்கள் அம்மனிதரை மறந்து விடக்கூடும்.


அதனால்தான், எல்லோராலும் குற்றம் சொல்லமுடியாத பொருளாக,
எல்லோருக்கும் உயர்வானதொரு பொருளாக, ஏற்றத்தாழ்வு இல்லாத
ஒரு பொருளாக, எல்லாக் காலங்களிலும் நிலைத்த பொருளாக

இறைச் சித்தாந்தம் தோன்றி அந்த இறைவனைக் கோயிலுக்குள்
 மனித குலம் கண்டு வருகிறது.


அதனால்தான், ஒவ்வொருவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை,
மேலோனாக, அன்பனாக,குழந்தையாக 
ஏன் காதலியாகக் கூடக்கண்டு
இன்புற்றுவருகிறார்கள். ஒவ்வொருவரின் அகத்தையும் இறைவன்
அறிவான். அன்போடு நாம் சென்று இறைவனைக் கோயிலில் சென்று
வழிபட்டு நமக்கு நிம்மதி கிடைப்பதே நமது இந்தத் தத்துவத்தால்தான்.


எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவன் இறைவன். அவன் சன்னதியில்
எல்லோருக்கும் நிம்மதி கிடைக்கிறது என்றால் இதனை விட வேறு
உயர்வான பொருள், முனிவு இலாத பொருள் வெறென்ன இருக்க முடியும்?


          "தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
          முனிவி லாததோர் பொருளது கருதலும்"


                  * அர்த்த யாம பூசனைக்கு வாசல் நிறைவுபெறுகிறது *

--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

No comments:

Post a Comment